EMI Options available. Ends SoonBook Now
Iswarya Fertility Centre & Women's Hospital
IVF

IVF in Tamil – Treatment Steps and Procedure

📅18 Jul 2025

We have made a detailed patient info sheet about IVF Treatment in Tamil language which is very easy to understand. Get benefitted. Read below about about IVF and all detailed steps about IVF in Tamil. IVF is also called as Test Tube Baby which was very popular term long back. IVF in Tamil. Treatments Step […]

We have made a detailed patient info sheet about IVF Treatment in Tamil language which is very easy to understand. Get benefitted.

Read below about about IVF and all detailed steps about IVF in Tamil.

IVF is also called as Test Tube Baby which was very popular term long back.

IVF in Tamil. Treatments Step by Step

Read about IVF in Tamil language. சோதனை குழாய் சிகிச்சை. We have explained about the procedure in Simple terms in the videos below and pages mentioned here.

ஐ.வி.எஃப். சிகிச்சை (IVF – INVITRO FERTILIZATION):

இயற்கையான முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தை பெறும் சூழல் இல்லாத நிலையில் சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐ.வி.எஃப். சிகிச்சை நடைமுறைப்படுத்தப் படுகிறது.

சோதனைக் குழாய் சிகிச்சை அல்லது டெஸ்ட் டியூப் பேபி என்று உலகம் முழுவதும் பரவலாக அறியப்படுவதுதான் இந்த ஐ.வி.எஃப். சிகிச்சை முறை. ஆண் உயிரணுவையும் பெண்ணின் கருமுட்டையையும் உடலிலிருந்து வெளியே எடுத்து சேகரித்து, ஆய்வகத்தில் சோதனைக் குழாய்க்குள் ஒன்றாக்கி, பிறகு கருப்பைக்குள் செலுத்தி பதியமாக்கி கருத்தரிக்கச் செய்வதுதான் ஐ.வி.எஃப். சிகிச்சை. இந்த முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள பெண்ணுக்கு வயது ஒரு தடையாக இருப்பதில்லை. ஆனால் 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் கருப்பையில் குழந்தை வளர்வது சிரமமாகலாம் என்பதால் இவர்களுக்கு குழந்தைப் பேறு அடையும் வாய்ப்பு குறைகிறது.

இந்த சிகிச்சை முறையில், எடுத்தவுடனே ஆண் உயிரணுக்களையும் பெண் கருமுட்டையையும் சேகரிப்பதில்லை. முன்னேற்பாடுகள் மூலம் உயிரணு மற்றும் கருமுட்டைக்கு கூடுதல் தகுதி சேர்க்கப்படுகிறது. பொதுவாக சோதனைக் குழாய் சிகிச்சை முறையானது 7 கட்டங்களாக செய்யப்படுகிறது.

* முன் பரிசோதனைகள் – Tests before IVF

* கருமுட்டை வலுவூட்டல் – Ovarian stimulation

* கருமுட்டை சேகரித்தல் – Oocyte retrieval

* தகுதியானவற்றை தேர்ந்தெடுத்தல் – Sperm selection

* ஆய்வகத்தில் உயிரணு, கருமுட்டையை ஒன்றுசேர்த்தல் – ICSI / IVF

* சினைக் கருவை வளரச் செய்தல் – Embryo culture

* சினைக் கருவை கருப்பைக்குள் செலுத்துதல். – Embryo transfer

இந்த செயல்முறைகளை இனி விளக்கமாகப் பார்க்கலாம்.

1. முன் பரிசோதனைகள்: Tests before IVF

கருத்தரிக்க இயலாமைக்கான பரிசோதனைகள் ஏற்கெனவே செய்யப்பட்டு இருந்தாலும், சோதனைக் குழாய் பரிசோதனை முறையை நடைமுறைப்படுத்தும் முன்னர் மீண்டும் முழுமையான பரிசோதனை செய்யப்பட வேண்டும். குறிப்பாக ஃபாலோபியன் குழாய், கருப்பை, சினைப்பை, கருப்பை வாய், கருப்பை ரத்தக் கட்டிகள் போன்றவற்றின் செயல்தன்மை சோதிக்கப்பட வேண்டும். கருப்பை வாய்க் கசிவை பரிசோதனை செய்வதன் மூலம், நோய்த் தொற்று இருக்கிறதா என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.

ஆண் உயிரணுக்களுக்கு ஸ்பெர்ம் சர்வைவல் டெஸ்ட் (Sperm survival test) செய்யப்பட வேண்டும். இதன் மூலம் ஐ.வி.எஃப்&க்கு எந்த முறையில் உயிரணுக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை அறியமுடியும். உயிரணுக்களில் தகுதியின்மை கண்டறியப்பட்டால் விந்து வங்கி மூலம் அல்லது தானமாக எவரிடமாவது உயிரணுக்களை பெறமுடியும்.

பெண் கருமுட்டை சினைப்பையில் இருந்து போதிய தகுதியுடன் வெளிவருகிறதா என்பதையும் கண்டறிய வேண்டும். சினைப்பை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்வதன் மூலம், கருமுட்டையின் தன்மையையும் அறிய முடியும். சினைப்பை செயல் இழப்பு கண்டறியப்பட்டால், கருமுட்டையைத் தானமாகப் பெற்றுக்கொள்வது நல்லது.

கருப்பையின் உட்பகுதி போதிய ஆரோக்கியத்துடன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள, முன்கூட்டியே ஹிஸ்ட்ரோஸ்கோபி பரிசோதனை செய்யப்படுகிறது. சினைக் கருவை ஏற்றுக்கொள்ளும் தன்மையும், வளர்க்கும் தகுதியும் கருப்பைக்கு உள்ளதா என்பதை இந்த சோதனை மூலம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

இதனையடுத்து பொதுவான பரிசோதனைகள் பெண்ணுக்கு செய்யப்படுகின்றன. குறிப்பாக சர்க்கரை, ரத்த அழுத்தம், தைராய்டு போன்ற பாதிப்புகள் உள்ளனவா என்பது ஆராயப்படுகின்றன. நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், அதனை கட்டுப்படுத்தும் செயல்பாடுகள் தொடங்கப்பட்ட பின்னரே, ஐ.வி.எஃப். செய்யப்படும். இதுபோன்றே ரத்தத்தில் மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், காசநோய், ரூபெல்லா நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றனவா என்பதையும் சோதிக்க வேண்டும். கர்ப்பிணியாவதற்குத் தகுதியாக தேவையான தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளனவா என்பதை ஆராய்ந்து, தேவைப்படும்பட்சத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். இத்தனை பரிசோதனைகள் செய்யப்படுவதன் நோக்கம், குறைகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து எப்படியும் குழந்தைப் பேறு அடையச்செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் ஆணும், பெண்ணும் இந்த முன் பரிசோதனைக்கு நல்ல முறையில் ஒத்துழைக்க வேண்டியது அவசியம்.

2. கருமுட்டை வலுவூட்டல்: Ovarian stimulation

பெண்ணின் கருமுட்டையானது முதிர்வடைந்து போதிய தகுதியுடன் கிடைக்கவேண்டும் என்பதற்காக மாதவிலக்குச் சுற்றின்போதே பல்வேறு ஹார்மோன் மற்றும் தூண்டுதல் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மாதவிலக்கு நின்ற தினத்தில் தொடங்கி கருமுட்டை வெளிவரும் வரையில் மருந்துகள் உட்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒன்றுக்கும் மேற்பட்ட கருமுட்டை கிடைக்கும். இந்த நேரத்தில் சினைப் பையில் நிகழும் மாற்றங்கள் அல்ட்ராசவுண்ட் உதவியுடன் துல்லியமாக கவனிக்கப்படு கிறது. ரத்தத்தில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவும் பரிசோதிக்கப்படுகிறது. பெண்ணுக்கு ஹெச்.சி.ஜி. எனப்படும் ஹ§யுமன் கோரியானிக் கொனோடிராபின் ஊசி போடுவதால், எந்த நாளில் கருமுட்டை வெளிப்படும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியும். பொதுவாக இந்த ஊசி போட்ட 36 மணி நேரத்தில் கருமுட்டை வெளிப்படும் என்பதால், அதனை எடுத்து பாதுகாப்பதற்கு மருத்துவர் தயாராக இருக்க வேண்டும். சில நேரங்களில் இயற்கையாகவே கருமுட்டை வெளிப்படுவதும் உண்டு. இந்த நேரத்தில் தொடர் கண்காணிப்பு இருக்கும்பட்சத்தில் இந்த கருமுட்டையினையும் சேகரிக்க இயலும். எதிர்பார்ப்புக்கு முன்பே கருமுட்டை வெளிவரும்பட்சத்தில், சோதனைக் குழாய் கர்ப்ப சிகிச்சையைத் தொடரமுடியாமல் போய்விடும்.

அதேபோல், கருமுட்டை போதிய அளவு முதிர்ச்சி அடையவில்லை என்றாலும், முதிர்வடையக் கொடுக்கப்பட்ட மருந்துகள் சரியாக வேலை செய்யவில்லை என்றாலும், எதிர்பார்க்கும் நேரத்துக்கு முன்பாக கருமுட்டை வெளியானாலும் ஐ.வி.எஃப். சோதனையை தொடரமுடியாமல் போய்விடும். அதனால், அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் தொடர் கண்காணிப்பு அவசியம்.

3. கருமுட்டை சேகரித்தல்: Oocyte retrieval

அல்ட்ராசவுண்ட் உதவியுடன் பெண்ணின் கருமுட்டை முதிர்ந்து வரும் நேரத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்பதைப் பார்த்தோம். அப்படி சரியான நேரத்தில் கருமுட்டை வெளிவரும்போது, பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து, சிறிய ஊசியைச் செலுத்தி, கரு முட்டையை வெளியே எடுத்து சேகரிக்க வேண்டும். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் திரையில் சினைப் பையைத் தெளிவாகப் பார்க்கமுடியும். திரையில் பார்த்தபடி, அதற்குரிய ஊசியை கருப்பாதைவழி செலுத்தி அங்குள்ள கருமுட்டையும் அத்துடன் இணைந்த திரவமும் சேர்த்து எடுக்கப்படுகிறது. ஊக்க மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதால் 10 முதல் 15 முட்டைகளை சேகரிக்க முடியும். ஒருசில மருத்துவமனைகளில் கருமுட்டை சேகரிக்கவும் லேப்ராஸ்கோபி பயன்படுத்துகிறார்கள். இன்றைய நிலையில் அல்ட்ராசவுண்ட் மூலம் கருமுட்டை சேகரிப்பதே போதுமானதாகும். லேப்ராஸ்கோபி பயன்படுத்துவது தேவையற்ற செலவுதான். கருமுட்டை சேகரிப்பு காரணமாக பெண்ணுக்கு பெரிய அளவில் அசௌகரியம் எதுவும் தென்படுவதில்லை. மயக்கம் தெளிந்தவுடன் இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பலாம்.

4. தகுதியானவற்றை தேர்ந்தெடுத்தல்: Sperm selection

முன்கூட்டியே பெறப்பட்ட ஆண் உயிரணுக்கள் அல்லது அப்போது பெறப்பட்ட உயிரணுக்கள் கல்ச்சர் முறையில் பாதுகாக்கப்படுகிறது. இவற்றில் நன்றாக நீந்துபவை மட்டும் தேர்வு செய்யப்படுகிறது. இந்த உயிரணுக்கள் பின்னர் சுத்திகரிப்பு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் எதிர்ப்பணுக்கள் பாதிப்பு இல்லாமல் எளிதில் பாய்வதற்குத் தயாராக இருக்கும்.

பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட திரவத்தோடு கூடிய கருமுட்டைகள் பரிசோதனை செய்யப்படும். கருமுட்டை போதிய அளவுக்கு முதிர்ச்சி யடைந்து, கர்ப்பம் தரிப்பதற்குத் தயாராக இருக்கிறதா என்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டும். ஆண் உயிரணு மற்றும் பெண் கருமுட்டை ஆகியவை தேவைக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் தரம்பிரித்து தயாராக வைத்திருக்க வேண்டும். உயிரணுக்கள், கருமுட்டை இரண்டும் தரம் பிரித்து தேர்வு செய்யப்பட்டதும், இரண்டையும் இணைக்கும் செயலில் ஈடுபட வேண்டும்.

5. ஆய்வகத்தில் உயிரணு, கருமுட்டையை ஒன்றுசேர்த்தல்: IVF / ICSI

சுத்திகரிக்கப்பட்டு சேமிக்கப்பட்டிருக்கும் ஆணின் உயிரணுக்களும்,

சினைப்பையில் இருந்து முதிரச்செய்து எடுக்கப்பட்ட கருமுட்டை யையும் சோதனைக் குழாயில் ஒன்றுசேர்க்க வேண்டும். பெரும்பாலும் கரு முட்டையை எடுத்தவுடனேயே இந்த சிகிச்சை முறை தொடங்கப்படு கிறது. அரிதாகவே ஒருசில நாட்கள் பாதுகாப்பாக சேமித்துவைத்த பின்பு சோதனைக் குழாய் சிகிச்சை முறை நடைபெறுகிறது.

இந்தக் கட்டத்தில் முதலில் கரு நன்றாக வளர்ச்சி அடையக்கூடிய திரவத்தை சோதனைக் குழாய்க்குள் நிரப்பி, அதனுள்ளே உயிரணுக்களும் கருமுட்டைகளும் செலுத்தப்பட வேண்டும். அதன் பிறகு இந்த சோதனைக் குழாயை, பெண்ணின் உடல் சூட்டைப் போல் 37 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் உள்ள இன்குபேட்டரில் வைத்து பாதுகாக்க வேண்டும். இதுவரையிலான செயல்பாடுகள் எல்லாமே மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் செய்யப்பட வேண்டும். உயிரணுக்களையும் கருமுட்டையையும் கையாள்வதற்கு சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர் தேவைப்படுவதனால்தான், இந்த செயற்கை குழாய் சிகிச்சை முறையினை ஒருசில மகப்பேறு மருத்துவர்கள் மட்டுமே மேற்கொள்கிறார்கள். நான் இதற்கென வெளிநாட்டில் பயிற்சி எடுத்து வந்திருக்கிறேன் என்பதால்,என்னால் எளிதாக கையாள முடிகிறது.

அதனால் இந்த சிகிச்சையை மேற்கொள்ள விரும்பும் பெண்கள், அவர்கள் தேர்வு செய்திருக்கும் மருத்துவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும். அந்த மருத்துவர் சோதனைக் குழாய் குழந்தைக்கான சிகிச்சை முறைகளை அவரே செய்கிறாரா அல்லது பிறரது துணையுடன் செய்து முடிக்கிறாரா என்பதை அறிந்துதான் மருத்துவமனையைத் தேர்வுசெய்ய வேண்டும்.

6. சினைக் கருவை வளரச் செய்தல்: EMBRYO CULTURE

இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ள சோதனைக் குழாயை

தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். கருமுட்டையும் உயிரணுக்களும் இணைந்து செயல்படுவதற்கு குறைந்தது 12 மணி நேரமாவது ஆகும். முதலில் ஏதாவது ஒரு உயிரணு கருமுட்டையை துளைத்து, கருவாக்கத்துக்கு பிள்ளையார் சுழி போடும். அதன் பிறகு கருவுற்ற செல் இரண்டு செல்களாகப் பிரியும். அதன் பிறகு கருவின் செல்கள் மேலும் மேலும் பிரிந்துகொண்டே போகும். குறிப்பிட்ட நேரத்துக்குள் கருமுட்டையை உயிரணு துளைப்பது நிகழாவிட்டால், முட்டையின் மேல் துளையிட்டு பலவீனமாக்கி, தரமான ஒரு உயிரணுவைப் பிடித்து, முட்டையின் பலவீனப் பகுதியோடு உள்ளே புகுந்திடச் செய்ய வேண்டும். அதோடு நின்றுவிடாமல் செல்கள் சரியாக பிரிகிறதா, மேலும் மேலும் வளர்கிறதா என்பதைக் கண்காணித்துக்கொண்டே இருக்கவேண்டும். இரண்டு நாட்களுக்குப் பின்னர் பெண்ணின் கருப்பைக்குள் வைக்கத் தயாரான நிலையில் சினைக் கருக்கள் இருக்கும்.

7. பெண்ணின் கருப்பையில் சினைக் கருவை செலுத்துதல்: EMBRYO TRANSFER

சினைக் கருக்கள் தயாரானதும், மிக முக்கியமான செயல்பாடான எம்ப்ரியோ டிரான்ஸ்ஃபர் (Embryo transfer) எனப்படும் பெண்ணின் கருப்பைக்குள் சினைக் கருவை செலுத்தும் நடைமுறை ஆரம்பமாகிறது. சினைக் கருக்களில் ஒன்று பதியமாகாமல் போனாலும், இன்னொன்றாவது நிச்சயம் பதியமாக வேண்டும் என்பதற்காக இரண்டு அல்லது மூன்று சினைக் கருக்கள் பெண்ணின் கருப்பைக்குள் ஒரே நேரத்தில் செலுத்தப்படுகிறது. இதனால்தான் சில தருணங்களில் இரண்டு அல்லது மூன்று கருக்கள் பெண் வயிற்றில் வளரத் தொடங்குகின்றன.

கருப்பைக்குள் சினைக் கருவை செலுத்துவதற்கு முன்பு பெண்ணுக்கு மயக்கமருந்து கொடுக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் வலி இருப்பதில்லை என்றாலும் பெண் அசைந்துவிடக்கூடாது என்பதற்காகவே மயக்கமருந்து கொடுக்கப்படுகிறது.

சினைக் கருவை கருப்பைக்குள் செலுத்துவதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட உறிஞ்சு குழாய் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட சினைக் கருக்கள் கல்ச்சர் திரவத்துடன் உறிஞ்சப்படும். எடுக்கப்பட்ட சினைக் கருக்களை, பெண்ணின் கருப்பைக்குள் மருத்துவர் நிதானமாகவும் துல்லிய மாகவும் செலுத்த வேண்டும். இந்த நடைமுறை 10 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும். அதன்பிறகு 6 மணி நேரம் வரையிலும் அந்தப் பெண் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்படுகிறார். இந்த ஓய்வு அவசியம் இல்லை என்றாலும் பெண் மனதில் இருக்கும் டென்ஷன், பரபரப்பு அடங்குவதற்கு இந்த ஓய்வு அவசியமாகிறது. சினைக் கரு பெண்ணின் கருப்பையில் பதியமாகவேண்டும் என்பதற்காக, தேவைப்படும்பட்சத்தில் பெண்ணுக்கு புரொஜெஸ்டீரான் ஊசி அல்லது மாத்திரை கொடுக்கப்படும். அத்தோடு இந்த நடைமுறை முடிவடைகிறது. அதன்பிறகு பெண் வீட்டுக்குச் சென்று வழக்கம்போல் அனைத்து பணிகளையும் செய்யலாம்.

சினைக் கரு தயாராக இருக்கும்போது, ஒருசில பெண்களுக்கு திடீர் உடல்நலக் கோளாறு அல்லது வேறு சில வகையினில் தடங்கல் ஏற்படலாம். இதனால் உருவாக்கப்பட்ட சினைக் கரு வீணாகிவிடாமல் இருப்பதற்கு புதிய வழி கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி, கிரையோ பிரஷர் எனப்படும் நவீன வழிகாட்டுதலின்படி, சினைக் கருவை ரசாயனத்தில் அப்படியே உறைய வைத்துவிட முடியும். இதனை பாதுகாத்து தேவைப்படும் நேரத்தில் பெண்ணின் கருப்பைக்குள் செலுத்திவிட முடியும்.

இந்த நடைமுறை முடிந்தவுடன் பெண் அதிகம் எதிர்பார்ப்புக்கு ஆளாகிறாள். தனது வயிற்றில் உயிர் வளர்கிறது என்று ஆனந்தம் கொள்வாள். குடும்பத்தினர் அனைவருமே சந்தோஷம் அடைவார்கள். ஆனால், கருப்பையில் செலுத்தப்பட்ட சினைக் கருக்கள் பதியமாகி வளரத் தொடங்கிவிட்டனவா என்பதை அறிவதற்கு குறைந்தது 10 நாட்களாவது காத்திருக்க வேண்டும். அதன்பிறகு ரத்தத்தில் ஹெச்.சி.ஜி. அளவு எப்படியிருக்கிறது என்பதை பரிசோதனை செய்துதான், கர்ப்பத்தை உறுதி செய்யமுடியும். அதனால் கருப்பைக்குள் சினைக் கருவை வைத்ததுமே கர்ப்பம் தரித்ததாக பெண் எண்ணிவிடக் கூடாது. ஏனெனில், இப்போது இந்த ஐ.வி.எஃப். முறையின் வெற்றிவாய்ப்பு 50 சதவிகிதம் மட்டுமே என்பதை மனதில்கொள்ள வேண்டும். அதனால்தான் பலருக்கு மீண்டும் மீண்டும் ஐ.வி.எஃப். சிகிச்சை செய்யப்படும் தேவை உண்டாகிறது.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் பெண்ணின் கருப்பையில் 2 அல்லது 3 சினைக் கருக்கள்தான் செலுத்தப்படுகின்றன. ஆனால், அதிக அளவிலான கருமுட்டைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் படுவதால், மீதமுள்ள சினைக் கருவை என்ன செய்வார்கள் என்று யோசிக்கலாம். கூடுதலாக உள்ள சினைக் கருக்களை நைட்ரஜன் திரவத்தில் சேமித்துவைக்கிறோம். ஒருவேளை இந்த முறை அந்தப் பெண் கர்ப்பம் அடையவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை ஐ.வி.எஃப். சிகிச்சைக்கு அந்த சினைக் கருக்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். இதனால் மீண்டும் கருமுட்டையை அதிகரிக்கச் செய்வதற்கு ஊசி, மருந்து போன்றவை பயன்படுத்தத் தேவையில்லை இதற்கென சினைக் கருக்களை பாதுகாக்கும் நடவடிக்கை, எம்ப்ரியோ ஃப்ரீஸிங் என்று அழைக்கப்படுகிறது. முதல் ஐ.வி.எஃப். சிகிச்சையிலே பெண் கர்ப்பம் தரித்துவிட்டால், தேவையின்றி சேமித்துவைக்கப்பட்டிருக்கும் சினைக் கருக்களை நீக்கிவிடலாம் அல்லது தம்பதியரின் ஒப்புதலோடு யாருக்காவது தானம் கொடுக்கலாம். நாம் இதுவரை பார்த்ததுதான் ஐ.வி.எஃப். சிகிச்சை முறையின் வழக்கமான நடைமுறை. இதுதான் உலகம் முழுவதும் வெற்றிகரமாக பின்பற்றப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான பெண்களுக்குத் தாய்மையை வழங்கியிருக்கிறது. இந்த ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் புதிதாக சில நவீன யுக்திகள் இப்போது கையாளப்படுகின்றன.

இயற்கை முறையில் ஐ.வி.எஃப். (Natural cycle IVF):

சில பெண்களின் கருமுட்டையானது மிகவும் தரமானதாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு கருமுட்டை தூண்டுதல் எனும் செயல்பாட்டில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற நிலையில், பெண்ணுக்கு இயற்கையாக கருமுட்டை வெளிவந்த பிறகு, அதனை சேகரித்து ஐ.வி.எஃப். செய்யப்படுகிறது. இந்த நிகழ்வில் ஒரே ஒரு கருமுட்டை மட்டுமே இருக்கும் என்பதால், ஒரே ஒரு சினைக் கருதான் வளரமுடியும். அந்த ஒரே ஒரு கருமுட்டை சினைக் கருவாக உருவாகாமல் போவதற்கும், சினைக் கருவாக மாறிய பிறகு, கருப்பையில் பதியமாகாமல் போவதற்கும் வாய்ப்புகள் உண்டு. அதனால் இந்த செயல்பாட்டில் வெற்றிவாய்ப்பு குறைவு என்றாலும் செலவும் குறைவாகவே இருக்கும்.

இதேபோன்று தங்களது கருமுட்டை மற்றும் உயிரணுக்கள் மீது நம்பிக்கை இல்லாத தம்பதியர் பலர் உண்டு. அதனால் தானமாக பெற்று பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் சினைக் கருவை பெண்ணின் கருப்பைக்குள் ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் செலுத்துவது உண்டு. பாதுகாக்கப்பட்ட சினைக் கருவை பயன்படுத்துவதால், இதன் வெற்றி வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது.

பின்விளைவுகள்: COMPLICATIONS OF IVF

இந்த சோதனைக் குழாய் குழந்தை முறை, லட்சக்கணக்கான பெண்களுக்கு குழந்தைப் பேறு கொடுத்தாலும் சின்னச் சின்ன பின்விளைவுகள் காணப்படவே செய்கின்றன. இந்த முயற்சி தோல்வி அடையும்போது பெண் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறாள்.

மீண்டும் மீண்டும் இந்த ஐ.வி.எஃப். நடைமுறைப்படுத்துவதற்கு பொருட்செலவும் அதிகம் தேவைப்படுகிறது. முதல் முறை தோல்வியைத் தழுவும்போது, குடும்பத்தினர் மீண்டும் சிகிச்சை எடுத்துக்கொள்வதற்கு ஆதரவாக இருப்பதில்லை.

இதுதவிர, அளவுக்கதிகமான கருமுட்டை தூண்டலால் ஒருசில பெண்ணுக்கு சினைப்பை வீக்கமடைந்து வலியை உண்டாக்கலாம். அடிக்கடி வாந்தி வரும் உணர்வும், வயிறு பெரிதாகிப்போன உணர்வும் இருக்கலாம். மிகவும் அரிதாக தொற்றுக் கிருமிகள் தாக்குதல் ஏற்படலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகும்போது, அதனை ஆனந்தமாக எடுத்துக்கொள்பவர்களைவிட, பயப்படுபவர்கள்தான் அதிகம். அதிகமான எண்ணிக்கையில் வயிற்றில் வளரும் குழந்தைகளை வளர்ப்பதா அல்லது அழிப்பதா என்ற குழப்பம் உண்டாகலாம். பெண்ணின் உடல் நலனுக்கும் இது பாதிப்பினை உண்டாக்குகிறது. இரண்டு அல்லது மூன்று குழந்தைகளை பெற்றுக்கொண்டால், அவை எடை குறைவாக, சத்துக் குறைவாக பிறக்கும் வாய்ப்புகள் அதிகம்.

கருவில் அதிகப்படியாக இருக்கும் சிசுக்களை அழிக்கும் தொழில்நுட்பம் இப்போது இருக்கிறது. இந்தசிசுக்களை அழிப்பதன் காரணமாக தாய் மிகவும் வருத்தத்துக்கு ஆளாகலாம். சில நேரங்களில் ஒரு சிசுவை அழிக்க முயலும்போது, அருகே உள்ள ஆரோக்கியமான சிசுவுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.

இதுதவிர தனக்கு இயற்கை முறையில் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் பெண்ணின் அடிமனதில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், குழந்தை இல்லாத குறைபாடுக்கு முன்பு இந்த பின்விளைவுகள் எல்லாம் மிகவும் சாதாரணமே.

இதுவரையிலும் ஐ.வி.எஃப். சிகிச்சை முறையினை மட்டும் பார்த்தோம். இனி, அதனோடு இணைந்த மேலும் சில சிகிச்சை முறைகளைப் பார்க்கலாம்.

மேலும் சில நவீன சிகிச்சைகள் ADVANCED TREATMENTS

குழந்தை இல்லாத தம்பதியருக்கு குறிப்பாக பெண்ணுக்கு அரிய வரப்பிரசாதமாக ஐ.வி.எஃப். சிகிச்சை முறை நடைமுறையில் இருப்பதை கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம். இந்த சிகிச்சை முறையில் பல நவீன டெக்னிக் சேர்க்கப் பட்டு பல்வேறு சிகிச்சை முறைகள் இப்போது செயல்பாட்டில் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்ட ஒருசில சிகிச்சை முறைகளை மட்டும் இந்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

இக்ஸி சிகிச்சை (Intra-cytoplasmic sperm injection – ICSI):

குழந்தையின்மை ஏற்படுவதில் பெண் களைப் போலவே ஆண்களுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதன்படி, கருவுறுதலில் ஆண்களினால் ஏற்படும் குறைபாட்டைத் தீர்க்கும் சிறப்பு சிகிச்சை என்று இக்ஸி முறையைக் குறிப்பிட லாம். ரோம் நகரில் 1990&ம் ஆண்டு இக்ஸி சிகிச்சை அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் 1992&ம் ஆண்டில்தான் முதல் குழந்தை இந்த சிகிச்சை முறையில் பிறந்தது. 1995&ம் ஆண்டு முதல் இந்த சிகிச்சை உலகம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆண்களுக்கு உயிரணுக்கள் உற்பத்தி குறை வாக இருத்தல், உயிரணு வீரியம் இல்லாதிருத்தல், உயிரணுக் குழாய் அடைப்பு, உயிரணுக்கள் தொற்றுக்களுடன் இருத்தல் போன்ற குறைபாடு ஆண்களிடம் கண்டறியப்பட்டால், அ த னை முழு¬ ம ய £ க நீ க் கு வ த ற் கு இ க் ஸி சி கி ச் ¬ ச கைகொடுக்கிறது. ஆணுக்கு நல்ல உயிரணுக்களாக 10 இருந்தாலே போதும் என்பதுதான் இக்ஸி முறையின் சிறப்பு.

ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் பெண் கருமுட்டையை எடுப்பதற்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆணின் உயிரணுக்களை அதிக அளவில் செலுத்துவதே போதுமானது என்ற எண்ணம்தான் இருக்கிறது. ஐ.வி.எஃப். சிகிச்சை வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதற்கு ஆண் உயிரணுக்களின் தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்காமையும் முக்கிய காரணமாக இருக்கிறது. அதனால் இக்ஸி முறையில் ஆண் உயிரணுக்களின் தன்மை நன்கு ஆராயப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு செலுத் தப்படுவதால் வெற்றிவாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

சிகிச்சை முறை: PLAN OF TREATMENT

விந்துப்பையில் இருந்து ஆணின் நல்ல உயிரணுவை எடுத்து, பெண்ணின் கருமுட்டையில் துளையிட்டுச் செலுத்தி கரு உருவாக்கம் செய்யப்படுவதுதான் இக்ஸி சிகிச்சை முறையாகும். கருமுட்டைக்குள் உயிரணுவை மருத்துவரே நேரடியாக செலுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.எம்.எஸ்.ஐ. எனப்படும் இன்ட்ரா சைட்டோபிளாஸ்மிக் மார்பாலாஜிக்கலி செலக்டட் ஸ்பர்ம் இன்ஜெக்சன்’ (Intracytoplasmic morphologically selected sperm injection – IMSI) எனும் அதிநவீன கருவி, இந்த இக்ஸி முறைக்கு உதவுகிறது. இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் மூலம் உயிரணுக்களை ஆயிரம் மடங்கு பெரிதாகக் காண முடியும் என்பதால், உயிரணுக்களில் உள்ள குறைபாடுகளை எளிதில் கண்டறிய முடியும். குற்றமுள்ள உயிரணுக்களை நீக்கிவிட்டு, தகுதிவாய்ந்த உயிரணுவை மட்டும் ஊசி மூலம் எடுத்து, அதனை கருமுட்டைக்குள் செலுத்துகிறார்கள். அதன்பிறகு இன்குபேட்டரில் சினைக் கரு வளர்வதற்குத் தேவையான கல்ச்சர் ஊட்டச்சத்து வழங்கப் படுகிறது. இந்த நடைமுறைகளை எல்லாம் மருத்துவரே முன்னின்று செய்வதால், இக்ஸி சிகிச்சை முறையில் வெற்றிவாய்ப்பு அதிகம் உண்டாகிறது. இந்த சிகிச்சை முறைக்கு ஆரோக்கியமான ஓரே ஒரு ஆண் உயிரணுக்கூட போதும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்த சிகிச்சை நடவடிக்கை எல்லாமே ஐ.வி.எஃப். சோதனைக் குழாய் குழந்தைக் கான செயல்பாடுகளாகத்தான் இருக்கின்றன.

சர்ஜரி முறையில் உயிரணு சேகரித்தல்: SURGICAL SPERM RETRIEVAL

இயல்பாக உயிரணுக்களை வெளிப்படுத்த முடியாத ஆண்களுக்கு சர்ஜரி முறையில் உயிரணு தேடியெடுக்கப்படுகிறது. இதுவே தெஸா, மெஸா, பிஸா தொழில்நுட்பம் எனப்படுகிறது.

சில ஆண்களுக்கு அனைத்து உயிரணுக்களுமே குறையுடன் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் உயிரணுக்களை உற்பத்தி செய்தல், வளர்த்தல், விந்து நாளத்தில் இருந்து நகர்தல் போன்ற குறைபாடு தென்படலாம். இதுபோன்ற நேரங்களில் ஆண்களால் இயற்கையான முறையில் உயிரணுக்களை பாய்ச்ச முடியாத சூழல் உண்டாகும். இதுபோன்ற சிக்கலான காரணங்களுக்கு அண்மைக் காலம் வரையிலும் தீர்வு இல்லாமல் இருந்தது. அதனால் ஆண்மைக் குறைபாடு காரணமாக பலரும் குழந்தைப் பேறு அடைய முடியாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது இந்த நிலைக்குத் தீர்வாக சர்ஜரி மூலம் உயிரணுக்களை எடுக்கும் தெஸா, மெஸா, பிஸா தொழில்நுட்பம் வந்துவிட்டன. இவற்றை மேலோட்டமாகப் பார்க்கலாம்

மெஸா (Micro Epididymal Sperm Aspiration – MESA):

ஆணின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்றான எபிடிடைமிஸ் எனப்படும் விந்து மேல்நாளத்தில் இருந்து உயிரணுக்களை ஊசி மூலம் சேகரிப்பதுதான் மெஸா எனப்படும் சிகிச்சை. மயக்கமருந்து கொடுத்துத் தான் இந்த உயிரணுக்கள் எடுக்கப்படுகின்றன. இப்படி எடுக்கப்படும் உயிரணுக்கள் பெரும்பாலும் தரம் குறைவாகத்தான் இருக்கும். இந்த உயிரணுக்களை எடுத்து கிரையோஸ்டோரேஜ் செய்வதன் முலம் கருத்தரிக்கத் தகுதியானதாக மாற்றப்படுகிறது.

தெஸா (Testicular Sperm Extraction – TESE):

இந்த முறையில் ஆணின் விந்துப்பை எனப்படும் செமினல் வெஸிகிலில் இருந்து ஊசி மூலம் உயிரணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்கு மயக்க மருந்து கொடுக்கவேண்டிய தேவை இருக்காது. ஆனால், இனப் பெருக்க உறுப்புகளில் வலி தெரியாமல் இருக்கவும் மரத்துப்போகவும் ஊசி போடப்படுகிறது. இந்த முறையில், திசுக்களுடன் சேர்த்து எடுக்கப்பட்ட உயிரணுக்கள் குறைந்த எண்ணிக்கையில்தான் இருக்கும். கருக் கூட்டலுக்கு முன்பே இந்த முறையில் உயிரணுக்கள் எடுக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட வேண்டியது அவசியம்.

பெஸா (Percutaneous Epididymal Sperm Aspiration – PESA):

இது மிகவும் சுலபமான நடைமுறை என்று சொல்லலாம். வாஸ் டெஃபரென்ஸ் எனப்படும் விந்து பெருங்குழாய் நாளத்தில் இருந்து பெஸா சிகிச்சைக்கு உயிரணுக்கள் சேகரிக்கப்படுகின்றன. கருத்தடை சிகிச்சை செய்த ஆண் என்றாலும், அவருக்கு இந்த முறையில் உயிரணுக் களை சேகரிக்க முடியும். இக்ஸி முறையில் கருவூட்டலுக்கு இந்த முறையில் தான் உயிரணுக்கள் சேகரிக்கப்படுகின்றன என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

இதுவரை பார்த்த தெஸா, மெஸா, பிஸா தொழில்நுட்பம் மூலம் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு, அதனை பலமாக்கும் தொழில்நுட்பமும் அறிமுகமாகிவிட்டன. இந்தத் தொழில்நுட்பம் காரணமாக கருத்தரிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருவது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

ஆண் உயிரணுக்களை தகுதி மேம்படுத்தும் பல்வேறு வகையான சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டதால், இப்போது எப்படிப் பட்ட குறைகள் உள்ள ஆண் மகனும், நிச்சயம் தந்தையாக மாற முடியும். அதனால் ஆண்களில் யாருமே மலடு இல்லை என்ற நிலையை நோக்கி நவீன மருத்துவம் முன்னேறி வருகிறது. இதே நிலை விரைவில் பெண்ணுக்கும் ஏற்படும் என்றே நம்புவோம். இப்போது இன்னும் சில நவீன சிகிச்சை முறைகளைக் காணலாம்.

லேசர் அசிஸ்டெட் ஹெட்சிங்’ (Laser assisted hatching):

உயிரணு குறைபாடுள்ள ஆண்களுக்கான சிகிசை முறைகளைப் பார்த்தோம். இப்போது வயது முதிர்ந்த பெண்களுக்கான சிகிச்சை ஒன்றை பார்க்கலாம். 35 வயதைத் தாண்டிய பெண்கள் குழந்தைப் பேறு அடைவது கடினமாக இருக்கிறது. ஆனால், இந்த சிகிச்சையின் மூலம் மெனோபாஸ் நிலையை அடைந்த பெண்களும் கருத்தரிக்க முடியும். ஆம், லேசர் அசிஸ்டெட் ஹெட்சிங்’ (Laser assisted hatching): எனப்படும் நவீன சிகிச்சை வயதான பெண்களும் குழந்தை பெற்றுக்கொள்ள வழிகாட்டுகிறது.

பொதுவாகவே வயதான பெண்களின் கருமுட்டையின் வெளி ஓடு மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் இதனை துளைத்து ஆண் உயிரணுக்களால் நுழைய இயலாது. இந்த லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கருமுட்டையின் வெளிப்புற ஓடு மெலிதாக்கப்படுகிறது. இதனால் உயிரணு எளிதில் உள்ளே நுழைந்து சினைக் கருவாக உருவாக்கம் பெறுகிறது.

அதேபோன்று பெண்ணின் சினைப்பையில் இருந்து முழுமையாக வளராத கருமுட்டைகளை வெளியே எடுத்து வளரச்செய்யும் மெச்சூரேஷன் ஆஃப் ஓசிஸ்ட் (Maturation of oocytes) சிகிச்சை முறையும் நல்ல பலன் அளிக்கிறது. கருமுட்டையில் இருக்கும் குறைபாடுகள் எல்லாம் நீக்கப்பட்டு வளர்க்கப்பட்டு ஆண் உயிரணுவுடன் சேர்த்து சோதனைக் குழாயில் வளர்க்கப்படுவதால், இதன் வெற்றிவாய்ப்பும் நல்ல முறையில் இருக்கிறது.

கிஃப்ட் (Gamete Intra Fallopian Transfer – GIFT)

முதல் குழந்தை பெற்றுக்கொண்டவர்கள், அடுத்த குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் தடுமாறும்போது, அவர்களுக்குக் கை கொடுப்பது கிஃப்ட் சிகிச்சை முறையாகும். முதன்முறை கர்ப்பம் தரித்து அபார்ஷன் ஆனவர்களுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. சினைக் குழாய் எனப்படும் ஃபாலோப்பியன் டியூப் ஒன்று அல்லது இரண்டும் சரிவர பணியாற்றும்போதும் கிஃப்ட் சிகிச்சை பயன்படுத்தப்படுகிறது.

ஐ.வி.எஃப். சிகிச்சை முறையைப் போலவே இந்த முறையும் செயலாற்று கிறது என்றாலும், கிஃப்ட் சிகிச்சை முறையில், ஆண் உயிரணுவும் பெண் கருமுட்டையும் ஒன்று சேர்க்கப்பட்டு லேப்ராஸ்கோபி கருவி மூலம், நேரடியாக பெண்ணின் சினைக்குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. ஒரு சினைக் குழாய் அல்லது இரண்டு சினைக் குழாய்களிலுமே உயிரணுக்கள் செலுத்தப்படலாம். அதன் பிறகு அந்த உயிரணுக்கள் எவ்வித உதவியும் இல்லாமல், தானாகவே கருவுறுதலை நிகழ்த்துகிறது. அதைத்தொடர்ந்து, கரு இயற்கையாகவே நகர்ந்து கருப்பையை நோக்கி நகர்ந்து சென்றடைகிறது.

சிகிச்சை முறை: TREATMENT

ஐ.வி.எஃப். சிகிச்சையைப் போன்றே ஹார்மோன் தூண்டுதல் கொடுக்கப் பட்டு பெண்ணிடம் இருந்து கருமுட்டைகள் அதிக எண்ணிக்கையில் வெளியே எடுக்கப்படுகிறது. சேகரிக்கப்பட்ட கருமுட்டைகளை நுண் ணோக்கியில் பார்த்து, தரமானவை மட்டும் தனியே பிரித்து எடுக்கப்படு கின்றன. அதன் பிறகு ஆணின் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு, எதிர்ப்புத்தன்மை இருந்தால் அவற்றை நீக்கி சுத்திகரிக்கப்படுகிறது. இப்போது ஆண் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் ஒன்றுசேர் வதற்குத் தயார் நிலையில் இருக்கின்றன. உடனே இரண்டையும் கிஃப்ட் முறைக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கருவியின் மூலம் ஒன்று சேர்க்கப்படுகின்றன. லேப்ராஸ்கோபி கருவியின் மூலம், சினைக் குழாய் துவாரம் வழியாக நேரடியாக சினைக் குழாய்களுக்குள் செலுத்தப்படுகிறது. பெண்ணின் இனப்பெருக்க உறுப்பின் செயல் பாட்டைப் பொறுத்து ஒரு சினைக் குழாய் அல்லது இரண்டு சினைக் குழாய் களிலுமே இவை செலுத்தப்படுகின்றன. பொதுவாக ஒவ்வொரு சினைக் குழாயிலும் இரண்டிரண்டு என்ற ரீதியில் நான்கு சினைக் கருக்கள் செலுத்தப்படுகின்றன. நாம் ஏற்கெனவே பார்த்தபடி, ஃபாலோப்பியன் குழாய்களின் செயல்பாடு இயல்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த கிஃப்ட் சிகிச்சை முறை பயனளிக்கக் கூடியது. சினைக் குழாய்களில் ஏதாவது குறைபாடு தென்பட்டால் அவர்கள் நிச்சயமாக ஐ.வி.எஃப். எனப்படும் சோதனைக் குழாய் குழந்தைக்குத்தான் முயற்சி செய்யவேண்டும்.

வெற்றி விகிதம்: SUCCESS RATES OF IVF IN TAMIL

சோதனைக் குழாய் குழந்தைக்கான முயற்சியைவிட, இந்த கிஃப்ட் முறையில் கர்ப்பம் அடையும் வெற்றிவிகிதம் அதிகம் என்றே சொல்லலாம். ஏனெனில் பெரும்பாலும் இனப்பெருக்க உறுப்புகளில் குறைபாடு இல்லாத, ஆரோக்கியமான பெண்களுக்குத்தான் கிஃப்ட் முறை பரிந்துரை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட கருமுட்டையும், ஆண் உயிரணுக்களும் சேர்ந்து சினைக் குழாயில் செலுத்தப்படுவதால், அவை அங்கே இயற்கை சூழலில் வளர்வதுபோல் நன்றாகவே உருவாக்கம் பெறுகின்றன.

இன்னும் சொல்லப்போனால் கிஃப்ட் முறையானது கிட்டத்தட்ட இயற்கை முறை கருத்தரிப்பு போன்றுதான் செயல்படுகிறது. ஆரம்பகட்ட செயல்பாடுகள் மட்டுமே கருவியின் மூலம் செலுத்தப்படுகிறதே தவிர; மற்றவை அனைத்தும் இயற்கை முறையில் இயல்பாகவே நடைபெறுகின்றன. அதனால், இந்த முறையில் பெண் அதீத தன்னம்பிக்கை பெறுகிறாள். நல்ல ஆரோக்கிய மனநிலையில் பெண் இருப்பதால், அவளது கருத்தரிக்கும் சூழல் அதிகரிக்கிறது.

ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் சினைக் கருவை கருப்பை சுவர்கள் ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுவது உண்டு. ஆனால், இங்கே கரு உருவாக்கம் சினைக் குழாயில் நடைபெறுவதால், அவை தானாகவே நகர்ந்து சென்று கருப்பையை அடையும்போது, கருப்பை எளிதாக ஏற்றுக்கொள்கிறது. ஏனென்றால், இயற்கை முறையில் கர்ப்பம் தரிப்பது போலவே, சினைக் கருவானது சினைக் குழாயில் இருந்து தானாகவே நகர்ந்து சென்று கருப்பையில் ஊன்றுகிறது. அதனால், கருப்பை இந்த வகையிலான கருமுளைகளை மறுதலிப்பதில்லை. இதுவும் கிஃப்ட் சிகிச்சை முறை அதிக அளவில் வெற்றி அடைவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது எனலாம்.

ஐ.வி.எஃப். சிகிச்சை முறையில் சோதனைக் குழாய் பயன்படுத்தப் படுவது போன்று, இங்கே சினைக் குழாய்கள்தான் சோதனைக் குழாயாக பயன்படுகிறது. தன்னுடைய உடலே சோதனைக்கூடமாக செயல்படுவதால் பெரும்பாலான பெண்களும், அவரது குடும்பத்தாரும் இந்த சிகிச்சை முறைக்கு ஆதரவு தருகிறார்கள்.

இந்த சிகிச்சை முறையின் குறைபாடு என்று பார்த்தால், சினைக் குழாயில் செலுத்தப்படும் அணுக்கள் ஒன்றுசேர்ந்து கருப்பையை அடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதுதான். அதனால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கிறது. மேலும் இங்கே கருவுறுதல் சினைக் குழாய்க்குள் நிகழ்வதால், என்ன நிகழ்கிறது என்பதை கண்காணிப்பது கடினமாக இருக்கிறது. அதனால் கருத்தரியாமை ஏற்பட்டால், என்ன காரணங்களால் சிக்கல் ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள முடியாமல் போகிறது. ஏனெனில், சோதனைக் குழாய் குழந்தையில் நுண்ணோக்கி மூலம் உயிரணுக்களும் கருமுட்டையும் சோதனை செய்யப் படுகின்றன என்பதால் எளிதில் குறைபாடுகளைக் கண்டறியவும், தேவைப்பட்டால் அவற்றுக்குத் தேவையான சிகிச்சை மேற்கொள்ளவும் இயலும்.

மேலும், இந்த சிகிச்சையை லேப்ராஸ்கோபி சிகிச்சை மூலம்தான் மேற்கொள்ள முடியும். இதுபோன்று சின்னச் சின்ன குறைபாடுகள் தென்பட்டாலும், கிஃப்ட் முறையில்தான் அதிகம் கருத்தரித்தல் நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

இப்போது லேப்ராஸ்கோபி இல்லாமல் ஸ்கேன் உதவியுடன் உயிரணுக்களை இதற்கென தயாரிக்கப்பட்ட பிரத்யேக கருவியின் மூலம் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக, கருப்பை வாய் வழியே சினைக் குழாயில் செலுத்தும் வழி கண்டறியப்பட்டுள்ளது. இந்த முறையில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சை தேவைப்படாத காரணத்தால் செலவும், வேதனையும் மிகவும் குறைவாக இருக்கும். எவ்வித தழும்பும் ஏற்படுவதில்லை.

ஆனால், சரியான இடத்துக்கு உயிர் அணுக்கள் அனுப்பப்பட்டதா என்பதை ஸ்கேன் செய்துதான் கண்டறிய வேண்டும். லேப்ராஸ்கோபி கருவியில் உள்ளே வைக்கப்படும் இடத்தை கம்ப்யூட்டர் உதவியுடன் தெளிவாக கண்டுகொள்ள முடியும். அதனால் லேப்ராஸ்கோபி மூலம் அனுப்புவதைவிட, பெண் உறுப்பு வழியே அனுப்பும் கருக்கள், கருவாகும் வாய்ப்பு குறைவாகவே காணப்படுகிறது. அதனால் இப்போது வரையிலும் கிஃப்ட் முறையில் லேப்ராஸ்கோபி முறையில் கருவாக்கம் செய்வதுதான் பரிந்துரை செய்யப்படுகிறது. இந்த கிஃப்ட் முறையில் மேலும் சில நவீன சிகிச்சைகள் நடைமுறைபடுத்தப்படுகின்றன. அவற்றையும் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஷிஃப்ட் சிகிச்சை (Zygote Intrafallopian Transfer – ZIFT):

இந்த சிகிச்சை முறையில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருமுட்டையும் சோதனைக் குழாய் மூலம் ஒன்றுசேர்க்கப்படுகின்றன. ஆண் உயிரணுவானது பெண்ணின் கருமுட்டையைத் துளைத்து நுழைந்து சினைக் கருவானதும், அந்த செல்கள் மேலும் மேலும் பிரிவதற்கு முன்பு, ஃபாலோப்பியன் குழாய்க்குள் செலுத்தப்படுகிறது. அதாவது கருவானது சினைப்பட்டதும், ஒன்றுபட்ட நிலையில் அவை பிரிவதற்கு முன்பே சினைக் குழாயினுள் செலுத்தப்படுகிறது. குறிப்பாகச் சொல்வது என்றால் ஆணின் உயிரணு பெண்ணின் கருமுட்டையைத் துளைத்த 10 மணி நேரத்தில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. பெரும்பாலும் இந்த சிகிச்சை முறைக்கு லேப்ராஸ்கோபி கருவி பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் கருவுறுதலானது சினைக் குழாயினுள்ளே நிகழ்கிறது. அதன் பிறகு கருவுற்ற சினைக் கரு கருப்பைக்குள் சென்றடைகிறது. கருவுறுதல் சினைக் குழாயினுள்ளே நிகழ்வதால் கருப்பை இதனை எளிதில் ஏற்றுக்கொள்கிறது. இந்த சிகிச்சை முறையில் இருக்கும் குறைபாடு என்னவென்றால், இதற்கு ஆகும் செலவு ஐ.வி.எஃப்., கிஃப்ட் சிகிச்சைக்கு ஆகும் செலவைவிட அதிகம் என்பதுதான்.

டெட் சிகிச்சை (Tubal Embryo Transfer – TET):

ஷிஃப்ட் சிகிச்சை முறையில் கருவாக்கம் நடந்து செல்கள் பிரியும் முன்னரே சினைக் குழாயினுள் செலுத்தப்படுகிறது என்பதைப் பார்த்தோம். இந்த டெட் சிகிச்சை முறையில், கருவுற்ற சினைக் கருவானது 24 மணி நேரத்துக்குப் பிறகு முதன்முதலாக பிரிந்து 2 செல் கொண்ட கருவாக பிரியும் நிலையில் அல்லது பிரிந்த பிறகு சினைக்குழாயினுள் சினைக் கரு செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சை முறைக்கும் லேப்ராஸ்கோபி கருவியே பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாக நிகமும் கருவாக்கம் போன்றுதான் இந்த டெட் சிகிச்சை கருதப்படுவதால், கருப்பையில் கரு ஊன்றுவது எளிதாக இருக்கிறது.

அசிஸ்டட் ரீபுரொடக்டிவ் தொழில்நுட்பம் (Assisted Reproductive Technology – ART) in Tamil

இந்த முறையில் கருவாக்கம் சிறப்புற நடைபெற வேண்டும் என்பதற்காக, பெண்ணின் சினைப்பையில் இருந்து முட்டைகள் எடுக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்டு தகுதியானவை மட்டும், மீண்டும் பெண்ணின் உடலுக்குள் செலுத்தப் படுகிறது. இந்த முறையின் காரணமாக பெண்ணின் கருமுட்டையின் கருவாக்கம் தன்மை அதிகரிக்கிறது.

இவை தவிரவும் Assisted zona hatching (AZH), Transvaginal ovum retrieval (OCR), Autologous endometrial coculture (AEC), Preimplantation genetic diagnosis (PGD) போன்ற எத்தனையோ சிகிச்சை முறைகள் சின்னச் சின்ன மாற்றங்களுடன் குழந்தைப் பேறு அடைய பயன்படுத்தப்படுகிறது.

நாம் இதுவரையிலும் பார்த்த சிகிச்சை முறைகளில் பெரும்பாலோருக்கு குழந்தை கிடைப்பது உறுதி. அரிதாக சிலருக்கு தொடர்ந்து தோல்வி கிடைக்கலாம். அதேபோல் கர்ப்பப்பை இல்லாத பெண்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலரது கர்ப்பப்பை, குழந்தை சுமக்கும் தகுதியுடன் இருக்காது. இதுபோன்ற சூழலில் இவர்களுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு வாடகைத் தாய் குழந்தைதான். உயிரணு மற்றும் கருமுட்டை போதிய தகுதியை எட்டிப்பிடிக்க முடியாத சூழலுக்கும் வாடகைத் தாய் முறையே சரியானது. கருமுட்டை, உயிரணு தானம் பெறுவது பற்றியும் வாடகைத் தாய் குறித்தும் அடுத்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

IVF சிகிச்சை: பொதுவான தகவல்களுக்கு அப்பால்!

IVF சிகிச்சையின் படிகள் அனைவருக்கும் பொதுவானவை என்றாலும், உங்கள் **தனிப்பட்ட உடல்நிலை மற்றும் கருத்தரிப்பு சவால்களுக்கு** ஏற்ற சிகிச்சை திட்டமே அதிக வெற்றி விகிதத்தை உறுதி செய்யும்.

**Iswarya Fertility Center** இன் **கருத்தரிப்பு நிபுணர்கள்** (Fertility Experts) உங்களுக்குத் தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் தமிழ் மொழியில் சிகிச்சை வழிமுறைகளைத் தெளிவாக வழங்கி, IVF வெற்றியை அதிகரிக்க உதவுகிறார்கள்.

தமிழ் மொழியில் சிறந்த IVF வழிகாட்டுதலைப் பெற இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

Chat with us